மறையுரைச் சிந்தனை (ஏப்ரல் 06, 2017) – கடவுளின் அன்பு from Tcadmi's blog

இங்கிலாந்து நாட்டில், பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபல மறைபோதகர் சார்லஸ் ஸ்பேர்ஜியோன் (Charles Spurgeon) என்பவர். அவருடைய போதனையைக் கேட்க மக்கள் இங்கிலாந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருவார்கள்.

ஒருநாள் அவர் தன்னுடைய நண்பரோடு ஓர் ஆற்றின் கரையோரமாக காலார நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் காற்றடிக்கும் திசை காட்டும் கருவி (Weather Cock) ஒன்றை கண்டார். அதன்மேல் ‘கடவுள் அன்பாய் இருக்கிறார்’ (God Is Love) என்ற வசனம் பொறிக்கப்பட்டிருந்தது. உடனே சார்லஸ் தன்னுடைய நண்பரிடம், “கடவுளின் அன்பை வெளிப்படுத்த இந்த காற்றடிக்கும் திசைகாட்டும் கருவி பொருத்தமானது அல்ல, ஏனென்றால் இந்த கருவி காற்றின் வேகத்திற்கு ஏற்ப மாறும். ஆனால் கடவுளின் அன்பு மாறாதது” என்றார்.

அதற்கு அவருடைய நண்பர், “அப்படியல்ல சார்லஸ் அவர்களே, காற்று/துன்பம்/துயரம் எவ்வளவு வேகமாக அடித்தாலும், அவருடைய அன்பு என்றும் மாறாமல் இருக்கும் என்பதைக் குறிக்கத்தான் அவர்கள் இந்த காற்றடிக்கும் திசைகாட்டும் கருவியிலே ‘கடவுள் அன்பாய் இருக்கிறார்’ என்று வசனத்தைப் பொறித்து வைத்திருக்கிறார்கள்” என்று விளக்கம் தந்தார்.

தன்னுடைய நண்பர் வழியாக கடவுள் தனக்கு புதிய ஒரு விளக்கத்தைத் தந்ததற்காக சார்லஸ் ஸ்பேர்ஜியோன் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.

வாழ்வில் எவ்வளவு துன்பம், சோதனைகள், கஷ்டங்கள் வந்தாலும் கடவுள் நம்மீது வைத்திருக்கும் அன்பு என்றும் மாறாது என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துரைக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, தந்தைக் கடவுள் மக்களாகிய நம்மீது எந்தளவுக்கு அன்பு கொண்டிருக்கிறார் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார். இயேசு கூறுகிறார், “தம் மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெரும் பொருட்டு, அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மீது அன்புகூர்ந்தார்” என்று.

ஆம், கடவுளின் அன்பு மிக உயர்ந்தது. அவர் நம்மீது கொண்ட அளவுகடந்த அன்பின் காரணமாகத்தான் தன்னுடைய ஒரே மகனையே உலகிற்கு அனுப்பி, நம்மை எல்லாம் மீட்டுக்கொண்டார். ஆதலால், கடவுள் நம்மீது அளவுகடந்து கொண்டிருக்கிறார் என்றால், நாம் அவருடைய அன்புக்கு பிரதிபலனாக என்ன செய்யவேண்டும்? என்று சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமானதாகும். யோவான் நற்செய்தி 6:29 ல் வாசிக்கின்றோம், “கடவுள் அனுப்பியவரை நம்புவதே, கடவுளுக்கு ஏற்ற செயலாகும்” என்று. எனவே, நாம் கடவுள்மீது கொண்டிருக்கும் அன்பை வெளிக்காட்ட வேண்டும் என்றால், அவருடைய மகனாகிய நம் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவை நம்பவேண்டும்.

அடுத்ததாக நற்செய்தி வாசகம் சுட்டிக்காட்டக்கூடிய இன்னொரு உண்மை இயேசுவை நம்பி ஏற்றுக்கொள்வதால் நாம் பெரும் நன்மைகள் பற்றியது. இயேசுவை இறைமகன் என்று ஏற்றுக்கொள்ளும்போது நாம் நிலைவாழ்வைப் பெறுவோம். அத்தோடுகூட தண்டனைத் தீர்ப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறோம். ஆகையால், நாம் இயேசுவே இறைமகன், மெசியா என்று நம்பி ஏற்றுக்கொள்வோம். அதன்படி நம்முடைய வாழ்வை அமைத்துக்கொள்வோம்.

1யோவான் 4:15 ல் வாசிக்கின்றோம், “இயேசுவே இறைமகன் என்று ஏற்று அறிக்கையிடுவோடு கடவுள் இணைந்திருக்கிறார்” என்று. ஆம், நாம் இயேசுவை இறைமகனாக, மெசியாவாக ஏற்றுகொள்ளும்போது, அதனை அறிக்கையிடும்போது கடவுள் உண்மையில் நம்மோடு இணைத்திருக்கிறார்.

ஆதலால், நாம் கடவுள் நம்மீது அளவுகடந்த கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து வாழ்வோம். அதோடு, கடவுளின் அன்புக்குப் பாத்திரமாக, அவருடைய மகன் இயேசுவை மெசியாவாக நம்பி அறிக்கையிடுவோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

– Fr. Maria Antonyraj, Palayamkottai.
 


Share:
Previous post     
     Next post
     Blog home

The Wall

Cyril Alex
Apr 26 '17
Thanks for sharing this.
You need to sign in to comment

Post

By Tcadmi
Added Apr 25 '17

Tags

Rate

Your rate:
Total: (0 rates)

Archives